Sunday 11 June 2017

காதணி விழாவிற்கு சென்றபோது விபத்து: ஏற்காடு மலைப்பாதையில் வேன் கவிழ்ந்தது; 19 பேர் படுகாயம்

காதணி விழாவுக்கு சென்றபோது ஏற்காடு மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 19 பேர் படு காயம் அடைந்தனர்.
ஏற்காடு, 

சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகா மாரமங்கலம் கூட்டுமுத்தல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவருக்கு சொந்தமாக 2 சுற்றுலா வேன்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள சேட்டுக்காடு கிராமத்தை சேர்ந்த சிலர் திருச்செங்கோடு அருகே காளிப்பட்டி முருகன் கோவிலுக்கு உறவினர் வீட்டு காதணி விழாவில் பங்கேற்க செல்வதற்காக 2 வேன்களையும் வாடகைக்கு பேசினர். அதன்படி நேற்று காலை 8 மணியளவில் சேட்டுக்காடு பகுதியில் இருந்து 2 வேன்கள், ஏற்காடு மலைப்பாதை வழியாக சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

2 வேன்களில் மொத்தம் 45 பேர் இருந்தனர். ஒரு வேனை, அதன் உரிமையாளர் சக்திவேல் ஓட்டி வந்தார். வழக்கத்தை காட்டிலும் ஏற்காட்டில் பனிமூட்டம் அதிகப்படியாக இருந்ததால் மலைப்பாதையில் வாகனங்கள் மெதுவாகவே வந்தன. மலைப்பாதையின் 16-வது கொண்டை ஊசி வளைவில், சக்திவேல் ஓட்டி வந்த வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. 20 அடி பள்ளம் கொண்ட பகுதியில் வேன் கவிழாமல், சுவரில் தடுத்து நின்றதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வேனில் இடிபாடுக்குள் சிக்கி போராடி கொண்டிருந்தவர்களை அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், சேலம், ஏற்காடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வேன் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தேவராஜ், ருக்குமணி, அருணாச்சலம், தன்ராஜ், உண்ணாயி, ஓட்டுனர் சக்திவேல் ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கும், லேசான காயம் அடைந்தவர்கள் ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். மொத்தம் 19 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

MUTTON KOLAMBU RAJAMANI'S KITCHEN