லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கும்சாம்பி மாவட்டத்தில் வயிற்று போக்கு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமி பூனம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று காலை மாவட்ட அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல, சிறுமியின் மாமா நிர்வாகத்திடம் உதவி கேட்டு உள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் பணம் செலுத்துங்கள், இல்லையென்றால் தூக்கி செல்லுங்கள் என மனிதாபிமானமற்ற நிலையில் கூறிஉள்ளது.
சிறுமியின் உறவினர்கள் கேட்கப்பட்ட பணத்தை செலுத்த முடியாமல் சிறுமியின் உடலை தோளில் சுமந்து சென்று உள்ளனர்.
சிறுமியின் மாமா சிறுமியின் உடலை தோளில் சுமந்த வண்ணம் சைக்களில் சென்று உள்ளார். சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த கிராமத்திற்கு சிறுமியின் உடலை சைக்கிளில் கொண்டு சென்று உள்ளார். கடந்த மே மாதம் உத்தரபிரதேச மாநிலத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை எடுத்துச் செல்ல அவருடைய கணவருக்கும் அரசு மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வசதியை செய்துக் கொடுக்கவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர்கதையாகி உள்ளது.
சிறுமியின் தாயுடன் பிறந்த சகோதரர் பேசுகையில் இருந்த பணத்தையும் வைத்தியத்திற்காக செலவு செய்துவிட்டோம், உயிரிழந்த பின்னர் மேலும் பணம் கேட்டால் நாங்கள் சென்ன செய்வோம், என வேதனையுடன் கூறினார்.
சிறுமியின் தந்தை பேச வார்த்தையின்றி தவித்தார். இச்சம்பவத்தை அடுத்து மாவட்ட அதிகாரிகள், டாக்டர் மற்றும் சம்பவம் நடந்தபோது மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்தவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான அறிக்கையானது மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment