Sunday 11 June 2017

50 அடிஉயர பாலத்தில் இருந்து விழுந்து டிரைவர் பலி ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகாயம்

பாலத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட ஆட்டோ டிரைவர் மணிகண்டனை பொதுமக்கள் மீட்டனர்.
வேலூர், 

வேலூரில் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது கார் பயங்கரமாக மோதியதில் 50 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த டிரைவர் பலியானார். மேலும் ஆட்டோவில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விடுமுறையை கொண்டாட

வேலூர் சலவன்பேட்டை எஸ்.எஸ்.கே. மானியம் பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 45), அவரது மனைவி ஷோபா (36), மகன்கள் யோகமூர்த்தி (17), மோகன் (12), மகள் மைதிலி (15) மற்றும் ராமுவின் உறவினர் மகன் மனோ (12). இவர்கள் நேற்று விடுமுறை என்பதால் ஆற்காடு அருகே உள்ள ‘தீம்’பார்க்குக்கு செல்ல முடிவு செய்தனர்.

இதற்காக கொசப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (34) என்பவருடைய ஆட்டோவில் நேற்று காலை புறப்பட்டனர். ஆட்டோவை மணிகண்டன் ஓட்டினார்.

வேலூர்- ஆற்காடு ரோட்டில் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே புதிய பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் வாகனங்கள் கிரீன்சர்க்கிள் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன. இதனால் மணிகண்டன் கிரீன்சர்க்கிள் வழியாக சென்று அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆட்டோவை ஓட்டிச்சென்றார். கலெக்டர் அலுவலகம் அருகே மேம்பாலத்தில் அவரது ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது.

பாலத்தில் இருந்து விழுந்தனர்

அந்த கார் மேம்பாலத்தில் உள்ள வளைவில் வந்தபோது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நிலைதடுமாறியதில் முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் மணிகண்டனும், ஆட்டோவில் சென்ற ராமுவின் மகன் யோகமூர்த்தியும் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்டு 50 அடி உயர மேம்பாலத்தில் இருந்து அலறியபடி கீழே விழுந்தனர். அந்த பகுதியில் இருந்தவர்கள் இதனை பார்த்து அங்கு அதிர்ச்சியுடன் ஓடிவந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர்.

இந்த விபத்தில் ஆட்டோ நொறுங்கியது. ஆட்டோ மீது மோதிய கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 மீட்டர் தூரம் தாறுமாறாக ஓடி நின்றது. காரின் முன்பகுதியும் சேதமடைந்தது.

இந்த நிலையில் ஆட்டோவில் இருந்து மேம்பாலத்தின்கீழ் தூக்கி வீசப்பட்ட ஆட்டோ டிரைவர் மணிகண்டனுக்கும், யோகமூர்த்திக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

ஆட்டோ டிரைவர் பலி

ராமு, ஷோபா, மைதிலி, மோகன், மனோ ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர். இதனிடையே அங்கு வந்த ஆட்டோவில் டிரைவர் மணிகண்டன் மற்றும் யோகமூர்த்தி ஆகியோர் ஏற்றப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஆட்டோ டிரைவர் மணிகண்டன் இறந்துவிட்டார். யோகமூர்த்திக்கும் மற்றவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் ரோட்டில் கிடந்த ஆட்டோ, காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காரை ஓட்டிச்சென்ற பெங்களூருவை சேர்ந்த அபிஷேக் உபாத்தியாயா (23) என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர் சம்பவம்

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, வேலூர் அருகே ரங்காபுரத்தில் இருந்து 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் புதிய பஸ் நிலையம் நோக்கி சென்றனர். கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று விபத்து நடந்த இதே மேம்பாலத்தில் பின்னால் வந்த கார் மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களும் கீழே தூக்கி வீசப்பட்டு பலியானார்கள். இதேபோன்று இந்தப்பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகிறது.

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அசுரவேகத்தில் செல்கின்றன. நேற்று விபத்து நடந்த மேம்பாலம் வளைவாக உள்ளது. ஆனாலும் வாகனத்தில் வருபவர்கள் வேகத்தை குறைக்காமலேயே செல்கிறார்கள். இதனால் வளைவில் முன்னால் செல்லும் வாகனங்கள் அவைசெல்லும் பாதையைவிட்டு சிறிது விலகினாலும் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி விடுகிறது. எனவே, இந்த வளைவில் வாகனங்கள் செல்லும்போது வேகத்தை குறைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேம்பாலத்தின் இருபுறமும் கட்டப்பட்டுள்ள தடுப்புசுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

MUTTON KOLAMBU RAJAMANI'S KITCHEN